தெலுங்கானாவின் தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமனம்: பாஜக கடும் எதிர்ப்பு
புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்க ஏதுவாக தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்க ஏதுவாக தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டார். இதற்கு பாஜக தனது எதிர்ப்பை காட்டியுள்ளது. அக்பருதீன் ஒவைசி முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் கோஷாமஹால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பாஜக எம்எல்ஏக்கள் யாரும் பதவி ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல் மந்திரி கேசிஆரைப் போல ஏஐஎம்ஐஎம் கட்சிக்குக்கு பயப்படுகிறார். அதனால் அக்பருதீன் ஒவைசியை தற்காலிக சபாநாயகராக நியமிக்க அனுமதித்துள்ளார். பேரவையில் உள்ள மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது மரபு. ஆனால் சிறுபான்மையினரையும் ஏஐஎம்ஐஎம் கட்சியையும் சமாதானப்படுத்துவதற்காக அக்பருதீனை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.