ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது, ஏர் இந்தியா - பிரதமர் மோடி பாராட்டு


ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது, ஏர் இந்தியா - பிரதமர் மோடி பாராட்டு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Feb 2023 10:26 PM IST (Updated: 15 Feb 2023 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா ஒப்பந்தம் போட்டு உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் வாங்கியது.

அது முதல் ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டாடா நிறுவனம் மேற்ெகாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய விமானங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் 40 அகன்ற வகையான ஏ350 ரக விமானங்களும் அடங்கும்.

பிரதமர் மோடி-மேக்ரான் சந்திப்பு

இந்த தகவலை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையே நேற்று நடந்த காணொலி காட்சி சந்திப்பு நிகழ்வில் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டார்.

இதன் மூலம் ஏர் இந்தியாவுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் இருந்தபோது கடந்த 2005-ம் ஆண்டு 111 விமானங்கள் வாங்கப்பட்டு இருந்தன. அதன் பிறகு தற்போதுதான் புதிய விமானங்கள் வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2,000 விமானங்கள் தேவை

ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்குவதை மிகவும் முக்கியமான ஒப்பந்தம் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

நமது சிவில் விமானப் போக்குவரத்து துறை இந்தியாவின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அடுத்த 15 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு அதிகமான விமானங்கள் ேதவைப்படுகின்றன.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்துவது நமது தேசிய உள்கட்டமைப்புக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 147 ஆக உயர்ந்து இருக்கிறது. உடான் திட்டம் மூலம் இந்தியாவின் தொலைதூர பகுதிகளும் வான்வழி இணைப்புகளை பெற்றுள்ளன. இது மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கிறது.

3-வது பெரிய சந்தை

விமான போக்குவரத்து துறையில் உலகின் 3-வது பெரிய சந்தை என்ற நிலையை வெகுவிரைவில் இந்தியா பெறும்.

'இந்தியாவில் தயாரிப்போம்-உலகுக்காக தயாரிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் விமான உற்பத்தியில் ஏராளமான புதிய வாய்ப்புகள் திறந்துள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை பிரச்சினையாக இருந்தாலும் சரி, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, இந்தியாவும் பிரான்சும் இணைந்து நேர்மறையான பங்களிப்பைச் செய்கின்றன.

இன்று, சர்வதேச ஒழுங்கு மற்றும் பலதரப்பு அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உறுதி செய்வதில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான கூட்டு உறவு முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

220 போயிங் விமானங்கள்

இந்த நிலையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களை ஏர் இந்தியா வாங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஏர் இந்தியா-போயிங் இடையே போடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் 200-க்கு மேற்பட்ட அமெரிக்க தயாரிப்பு விமானங்கள் வாங்கப்படுவதை இன்று அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்' என தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தப்படி 190 பி737 மேக்ஸ் விமானங்கள், 20 பி787 விமானங்கள், 10 பி777எக்ஸ் விமானங்கள் என மொத்தம் 220 விமானங்கள் 34 பில்லியன் (சுமார் ரூ.2.72 லட்சம் கோடி) செலவில் வாங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதில் மேலும் 70 விமானங்கள் கூட வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story