டெல்லியில் காற்றின் தரம் மோசம்; உலக அறிக்கையை சுட்டி காட்டி கெஜ்ரிவாலுக்கு கவர்னர் கடிதம்
டெல்லியில் 2015-க்கு பின்னர், கடந்த ஆண்டு 206 நாட்கள் காற்றின் தரம் சிறந்த முறையில் இருந்தது என்று கோபால் ராய் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் துணை நிலை கவர்னராக உள்ள வி.கே. சக்சேனா, முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உலக காற்று தர அறிக்கை 2023-ன் படி டெல்லியில் காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் பெரிய அளவிலான துகள்கள் அபரிமித அளவில் அதிகரித்து காணப்படுகிறது. இது எச்சரிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது.
இவற்றில், 5-ல் 2 பங்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் ஏற்பட கூடியவை. இந்த அளவு கொண்ட துகள்களுடன் மக்கள் நீண்டகாலம் வாழும்போது, அது விரைவில் அவர்களிடையே மரணம் ஏற்படுத்த வழிவகுக்கும். இதுதவிர, நுரையீரல் பாதிப்புகள், பலவகையான சுவாச கோளாறுகள் ஏற்படவும் வழிவகுக்கும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என நான் உறுதியாக கூற முடியும்.
டெல்லியில் உள்ள பல நகர மருத்துவமனைகளில் சுவாச பாதிப்புகளுடன் பெருமளவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனை பொது சுகாதார நெருக்கடி நிலை என அழைத்துள்ள சக்சேனா, டெல்லி மக்களின் மிக அடிப்படையான இயற்கை மற்றும் அடிப்படை உரிமையை மீறுகிற விசயம் என்றும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார். அதனால், முதல்-மந்திரி கெஜ்ரிவால் இதற்கு பொறுப்பேற்று, உறுதியான மற்றும் தைரியத்துடனான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறும்போது, 2015 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில், 10 மற்றும் 2.5 அளவிலான துகள்கள் குறைந்து வருகிறது என்றும், 2015-க்கு பின்னர், கடந்த ஆண்டு 206 நாட்கள் காற்றின் தரம் சிறந்த முறையில் இருந்தது என்று கூறியுள்ளார்.