அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம்
பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம் அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம் அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரம் ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. கடந்த 2021-2022-ம் ஆண்டு தரவுகளின் படி இந்த விமானநிலையத்திற்கு ஓராண்டுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 14 விமானங்கள் வந்து செல்கின்றன.
மேலும் 1 கோடியே 62 லட்சத்து 87 ஆயிரத்து 97 பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதுபோல் 4 லட்சத்து 11 ஆயிரத்து 550 டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. பெங்களூரு விமான நிலையம் ஆசியாவில் பரபரப்புடன் இயங்கும் விமான நிலைய பட்டியலில் 29-வது இடத்தை பிடித்துள்ளது.
ரூ.13 ஆயிரம் கோடி செலவில்...
இந்த நிலையில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் 2-வது விமான முனையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி தொடங்கியது. 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த முனையம் கட்டுமான பணிகள் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 2-வது விமான முனையம், ஓடுதளம் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன் அருகிலேயே பெங்களூருவை நிர்மாணித்த கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 2-வது விமான முனையத்தை நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.
சுவாரசிய தகவல்கள்
இந்த நிலையில் இந்த 2-வது விமான முனையம் பிரமாண்ட அரண்மனை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளை கவரும் வகையில் பசுமை சூழலை மையப்படுத்தி பூந்தொட்டிகள், அலங்கார பூக்கள், கண்களை கவரும் வகையில் பல்வேறு டிசைன்களில் மேற்கூரைகள், பக்கவாட்டு சுவர்கள், தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2-வது விமான முனையம் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
பூங்கா முனையம்
* மும்பை, டெல்லி விமான நிலையங்களை அடுத்து 2-வது முனையத்துடன் செயல்படும் விமான நிலையம் என பெயரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது.
* இந்த 2-வது விமான முனையம் கார்டன் டெர்மினல் (பூங்கா முனையம்) பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு பூங்கா நகரம் என பெயர் உண்டு. அதை கவுரவப்படுத்தும் வகையில் 2-வது முனையத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.