என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகத்தில் கைதான 7 பேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை


என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகத்தில் கைதான 7 பேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகத்தில் கைதான 7 பேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பி.எப்.ஐ. அமைப்புகளின் அலுவலகங்களிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தப்பட்டு இருந்தது. இந்த சோதனையின் போது பெங்களூருவை சேர்ந்த பி.எப்.ஐ. அமைப்பின் முக்கிய தலைவரான யாசிர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் கைதான யாசிர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று முன்தினம் சிவமொக்காவில் உள்ள பி.எப்.ஐ. அமைப்பின் பிரமுகரான ஷாகீத் வீட்டில் இருந்து ரூ.19 லட்சம் சிக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதவிர கர்நாடகத்தில் நடந்த சோதனையின் போது பி.எப்.ஐ. அலுவலகங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்து பணம் வந்திருப்பது, சட்டவிரோத செயல்களில் பணப்பரிமாற்றம் செய்திருப்பதற்கான வங்கி கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீரசாவர்க்கர் புத்தகத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி இருந்தார்கள். அந்த புத்தகத்தை எதற்காக வைத்திருந்தனர்? என்பது குறித்து கைதானவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கைதான 7 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story