நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
x

நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது.

இதனிடையே, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நுபுர் சர்மா மீது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி, மராட்டியம், மேற்குவங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பல்வேறு மாநிலங்களில் தன் மீது பதியப்பட்டுள்ள 10 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து அதை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டுமென நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நுபுர் சர்மா மீது பதியபட்ட 10 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றியுள்ளது. மேலும், இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லி போலீஸ் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வேறு எங்காவது மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அந்த வழக்குகளையும் டெல்லி போலீஸ் விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story