எம்.எல்.ஏ.க்களை வாங்க பா.ஜ.க. முயற்சி செய்கிறதா..? கெஜ்ரிவாலிடம் ஆதாரம் கேட்கும் போலீஸ்
கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் தனது எக்ஸ் தளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்தை பதிவிட்டிருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.எல்.ஏக்களை பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டதாகவும், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கெஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர். இதுதொடர்பான நோட்டீசை நேரில் வழங்குவதற்காக நேற்று இரவு திடீரென கெஜ்ரிவால் மற்றும் கல்வி மந்திரி அதிஷி ஆகியோரின் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தனர். ஆனால் நோட்டீஸ் வழங்கவில்லை.
கெஜ்ரிவால் வீட்டில் உள்ள அதிகாரிகள் நோட்டீசை பெற மறுத்ததாலும், மந்திரி அதிஷி வீட்டில் இல்லாததாலும் நோட்டீஸ் கொடுக்காமல் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் இன்று காலையில் மீண்டும் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.