சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் சுரண்டல் என குற்றச்சாட்டு: டெல்லி போலீசார்


சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் சுரண்டல் என குற்றச்சாட்டு: டெல்லி போலீசார்
x

இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் சுரண்டல் என குற்றச்சாட்டு என்று டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு மற்றும் கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இந்தியாவின், சாதனை படைத்த உச்சபட்ச மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். டெல்லியில் கடந்த ஜனவரி 18-ந்தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இதன்பின்பு கடந்த 23-ந்தேதி மீண்டும் போராட்ட களத்திற்கு அவர்கள் திரும்பி உள்ளனர்.

இதுபற்றி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களிடம் பேசும்போது, 3 மாதங்கள் கடந்து விட்டன. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனாலேயே நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களுக்கு நியாயம் வேண்டும். இன்னும், எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை. டெல்லி மகளிர் ஆணையம் எங்களுக்கு ஆதரவு அளித்து இருப்பதற்காக நன்றி தெரிவிக்கிறோம் என கூறினார்.

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தவறி விட்டனர். என கூறியுள்ளனர். நாங்கள் தொடர்ந்து மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இது வீராங்கனைகளின் மரியாதை தொடர்பான விசயம். விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 3 மாதங்கள் கடந்தோடி விட்டன என அவர்கள் தெரிவித்தனர்.

சிறுமி உள்பட 7 இளம்பெண்கள் பிரிஜ்பூஷண் சிங்கிற்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தும் இன்னும் அது பதிவு செய்யப்படவில்லை. போக்சோ வழக்கும் பதிவாக வேண்டும் என கூறினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடியால் டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள் என மல்யுத்த வீரர் பூனியா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று மாலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் வருகிற மே 3-ந்தேதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என்று அரசியல் சார்பற்ற அமைப்புகளில் ஒன்றான சம்யுக்த கிசான் மோர்ச்சாவினரும் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி போலீசார் இன்று கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீரர்கள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது, ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார்.


Next Story