தந்தை மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; ஸ்வாதி மாலிவாலிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கணவர் கோரிக்கை


தந்தை மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு; ஸ்வாதி மாலிவாலிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கணவர் கோரிக்கை
x

தந்தை மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறிய ஸ்வாதி மாலிவாலிடம் போதை பொருள், உண்மை கண்டறியும் சோதனைகளை நடத்த கணவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் இயற்கை வாழ்விட மையம் ஒன்றில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு டெல்லி மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 11-ந்தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அந்த ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் பேசும்போது, எனது தந்தை சிறுமியாக இருந்தபோது என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னை அடித்து, துன்புறுத்தினார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

அவர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ, அப்போது நான் பயந்து போவேன். பயத்துடனேயே கழித்த பல இரவுகளை இன்றும் நினைவுகூர்கிறேன் என கூறினார்.

எனினும், இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர தனது தாயார், தாத்தா, பாட்டிகள் மற்றும் பிற உறவினர்கள் தனக்கு உதவி செய்தனர் என்றும் மாலிவால் கூறினார்.

அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான, பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த அரசியல்வாதி குஷ்பூ சுந்தரும் ஆதரவு தெரிவித்து பேசினார்.

எனினும் முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி பர்க்கா சுக்லா கூறும்போது, அவருக்கு மனநல சமநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என நான் நினைக்கிறேன். அதனாலேயே இதுபோன்று ஸ்வாதி மாலிவால் பேசி வருகிறார். முதலில், தன்னை அடிக்கிறார் என கணவர் மீது அவர் பல்வேறு தீவிர குற்றச்சாட்டுகளை கூறினார். அதன்பின்னர் தற்போது, உயிரிழந்த அவரது தந்தையை இதுபோன்று குற்றஞ்சாட்டி வருகிறார்.

அவர் கூறுகின்ற குற்றச்சாட்டுகள், உலகில் எந்த பகுதியிலும் இல்லாதது ஆகும். அது முற்றிலும் தவறு மற்றும் அதிர்ச்சியூட்ட கூடியது என கூறினார். டெல்லி மகளிர் ஆணைய தலைவி பதவியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இதுபோன்று அவர் பேசுவது வெட்கக்கேடானது. அது ஒரு கண்ணியமிக்க பதவி. அது மதிக்கப்பட வேண்டும்.

அவர் இதுபோன்று பேசினால், சமூகத்தின் மீதமுள்ள பெண்களுக்கு என்ன செய்தி சென்று சேர்க்கப்படும்? என்று கேள்வியும் எழுப்பினார். அவரை, டெல்லி துணை நிலை கவர்னர் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று பர்க்கா கூறினார்.

இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலின் முன்னாள் கணவரான நவீன் ஜெய்ஹிந்த் தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தனது தந்தை தன்னை அடித்து உள்ளார் என மாலிவால் என்னிடம் கூறியுள்ளார். ஆனால் பாலியல் துன்புறுத்தல் பற்றி ஒருபோதும் கூறியது இல்லை.

20 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்து விட்ட, ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அவரை பற்றி மாலிவால் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா? என்பது பற்றி மாலிவால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி வெளியான வீடியோவில், இந்த குற்றச்சாட்டுகள் தீவிரம் வாய்ந்தவை என தெரிவித்து உள்ளதுடன், அதனால் போதை பொருள் மற்றும் உண்மை கண்டறியும் சோதனைகளை மேற்கொள்வது மாலிவாலின் பொறுப்பு. அந்த அறிக்கையை பொதுவெளியில் அவர் வெளியிட வேண்டும்.

அப்போதுதான் தந்தை-மகள் உறவுக்கு அவதூறு ஏற்படாது. சுரண்டல் என்பதும், பாலியல் சுரண்டல் என்பதும் முற்றிலும் வேறுபட்ட விசயம். மாலிவாலுக்கு மருத்துவரின் உதவி தேவை. அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். அவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டு இருந்தால், அதிக மனஉளைச்சலுக்கு அவர் ஆளாகி இருப்பார் என நவீன் கூறியுள்ளார்.

டெல்லியில் அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் மாலிவாலும், நவீனும் சந்தித்து, 2012-ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர். எனினும் 8 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது.


Next Story