5 ஜி ஏலத்தில் ஊழலா? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி
நாட்டில் தற்போது 4ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் விரைவில் 5ஜி அலைக்கற்றை அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. அதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது. இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) மட்டுமே ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்தில் முதன்முறையாக பங்கேற்ற அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம், 900, 1800, 2100, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட், 700, 800, 1800, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
வோடபோன் ஐடியா லிமிடெட், 1800, 2100, 2500, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும். அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடி, பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, வோடப்போன் ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி ஆகும்.
மேலும், அனைத்து பங்கேற்பாளர்களால் வழங்கப்படவுள்ள வருடாந்திர தவணைத்தொகை ரூ.13,365 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை முதன்முறையாக ஏலத்தில் விடப்பட்டது. இதனை வாங்க எந்த நிறுவனமும் போட்டிப்போடவில்லை.
அதேவேளையில், நான்கு பங்கேற்பாளர்களும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தங்கள் மற்றும் தெளிவான கொள்கை வழிகாட்டுதல் வெற்றிகரமான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வழிவகுத்தது. தொலைத்தொடர்பு துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் இது காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு அடிப்படை மதிப்பாக 4.3 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 71 சதவீதம் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில் ரூ 3 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 1 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு மட்டுமே கிடைத்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2ஜி அலைக்கற்றை ஏலத்தையும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தையும் ஒப்பிட்டு பா.ஜ.க. அரசை கேள்விகளால் துளைத்தெடுக்கின்றன.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்குதான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று ஒன்றிய அரசு தான் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 18 வருடங்களுக்கு முன்பு, தொழில் நுட்பத்தில் மிகவும் குறைந்த 2ஜி அலைக்கற்றை விற்பனையால் ரூ 1,73,000 கோடி அரசுக்கு இழப்பு என்றார் வினோத் ராய். காங்கிரஸ் - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோற்றது. ஆ.ராசா, கனிமொழி சிறை சென்றனர். மேம்பட்ட 5ஜிதொழில்நுட்பம் ரு 1,50,000 கோடிக்கு மேல் பெற முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
2ஜி புகார் வந்தபோது அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா பதவி விலகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஊழல் புகாரை நீதிமன்றத்திற்கு சென்று வாதம் செய்து ஆதாரங்களை அடுக்கி வழக்கிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் தற்போதைய மத்திய மந்த்திரி பதவி விலகுவாரா என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரத்தை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்து விமர்சிக்க தொடங்கி இருக்கின்றன. 5ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.