அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ந்தேதி தொடக்கம்..!
அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
தெற்கு காஷ்மீர் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் கோவிலுக்கான வருடாந்திர யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரைக்கான பதிவு ஏப்ரல் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
ராஜ்பவனில் ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் (SASB) 44-வது கூட்டத்தில் இந்த யாத்திரைக்கான அட்டவணை முடிவு செய்யப்பட்டது. அட்டவணையை வெளியிட்ட பின்னர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:-
"சுமூகமான மற்றும் தொந்தரவில்லாத யாத்திரையை உறுதி செய்ய நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. வருகை தரும் பக்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் அனைவருக்கும் நிர்வாகம் சிறந்த தரமான சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்கும். குகைக் கோவிலுக்கு யாத்திரை தொடங்கும் முன் தொலைத்தொடர்பு சேவைகள் செயல்படத் தொடங்கும் என்றும் திரு சின்ஹா கூறினார்.
இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டிலிருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கும்" என்று அவர் கூறினார்.