மணிப்பூர் விவகாரம்: தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு டெல்லியில் அமித்ஷா முக்கிய ஆலோசனை


மணிப்பூர் விவகாரம்: தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு டெல்லியில் அமித்ஷா முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 5 May 2023 10:02 AM GMT (Updated: 5 May 2023 10:03 AM GMT)

இரு குழுக்கள் இடையேயான மோதலால் மணிப்பூர் போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. மணிப்பூரில் இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்திகள் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஆனால் 4 வாரத்துக்குள் மெய்தி இன மக்களின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் ஐகோர்ட்டு சமீபத்தில் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நேற்று முன்தினம் நடந்தது.

சவுரசந்திரபூர் மாவட்டத்தில் மாணவர் அமைப்பின் பேரணிக்கு போட்டியாக பழங்குடி இனத்தினர் அல்லாதோர் பேரணி நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது.மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல மாவட்டங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழும், மணிப்பூர்-மியான்மர் எல்லையில் உள்ள மோரே கிராமத்திலும் வன்முறை மூண்டது. 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் ராணுவமும், அசாம் ரைபிள் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து 7 ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல மாவட்டங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். அவரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மணிப்பூரில் ஏற்கனவே 15 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 5 கம்பெனி அதிரடிப் படையினரை அங்கு மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்த அமித்ஷா டெல்லியில் முகாமிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். மணிப்பூரில் இயல்பு நிலையை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.


Next Story