மணிப்பூரில் சமூகத்தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
கலவரத்தால் பாதித்துள்ள மணிப்பூரில் இயல்பு நிலையை கொண்டுவர பல்வேறு சமூகத்தலைவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் 53 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ள பெரும்பான்மை சமூகமான மைதேயி சமூகத்தைச் சேர்ந்தோர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதை அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் எதிர்த்து போர்க்கொடி தூக்கி உள்ளன. மைதேயி மற்றும் இவ்விரு சமூகத்தினர் மத்தியில் இந்த மாதத்தொடக்கத்தில் ஏற்பட்ட மோதல்கள், பெரும் இனக்கலவரங்களாக விசுவரூபம் எடுத்தன.
இவற்றில் 80 பேர் பலியாகி உள்ளதாக மணிப்பூர் அரசு தகவல்கள் கூறுகின்றன.
அமித்ஷா ஆய்வு
இந்தநிலையில் அங்கு கள நிலைமை குறித்து நேரில் ஆராய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை இயக்குனர் தாபன் குமார் தேகாவுடன் தலைநகர் இம்பாலுக்கு நேற்று முன்தினம் சென்றார். அன்று இரவில் அவர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் கலவரங்களில் பலியானோருக்கு இழப்பீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. மாநிலத்தில் கலவரங்களைத் தொடர்ந்து விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், விலைவாசி குறைய ஏதுவாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை பெருமளவு கிடைக்கச்செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தலா ரூ.10 லட்சம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். இழப்பீட்டுத்தொகையை மத்திய மாநில அரசுகள் சமமாக (தலா ரூ.5 லட்சம்) வழங்கும்.
இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
கலவர பகுதியில் ஆலோசனை
இம்பாலில் நேற்று காலை பல்வேறு சமூக அமைப்புகள் அடங்கிய தூதுக்குழுவினரை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மேலும், அங்குள்ள பெண் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். மாநிலத்தில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டி, இயல்பு நிலையைக் கொண்டு வருவதில் அவர்களின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தினார்.
கலவரங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சூரசந்த்பூருக்கு அமித்ஷா, மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை இயக்குனர் தாபன் குமார் தேகாவுடன் ஹெலிகாப்டரில் சென்றார். அவர் தேவாலய நிர்வாகிகள், குகி சமூகத்தை சேர்ந்த பிரமுகர்களை சந்தித்து பேசினார். அவர்களின் பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் அமித்ஷா கேட்டறிந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.