தடய அறிவியல் துறையில் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது; உப்பள்ளியில் நடந்த விழாவில் அமித்ஷா பேச்சு


தடய அறிவியல் துறையில் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது; உப்பள்ளியில் நடந்த விழாவில் அமித்ஷா பேச்சு
x

தடய அறிவியல் துறையில் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று உப்பள்ளியில் நடந்த விழாவில் அமித்ஷா பேசினார்.

பெங்களூரு:

தடய அறிவியல் துறையில் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று உப்பள்ளியில் நடந்த விழாவில் அமித்ஷா பேசினார்.

அமித்ஷா உப்பள்ளி வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் உப்பள்ளிக்கு வருகை தந்தார்.

பின்னர் உப்பள்ளியில் உள்ள ஓட்டலில் அவர் தங்கினார். நேற்று காலையில் அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசினார்கள். பின்னர் தார்வாரில் புதிய தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு, அமித்ஷா பேசியதாவது:-

தடய அறிவியல் நிபுணர்கள்

தடய அறிவியல் துறையில் நமது நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் நமது நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் தடய அறிவியல் நிபுணர்கள் இருப்பார்கள். இதனை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். இந்தியாவில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், உலக நாடுகளுக்கு முன் மாதிரியாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

தற்போது போலி ரூபாய் நோட்டுகள், ஹவாலா பரிவர்த்தனை, எல்லையில் ஊடுருவல், போதைப்பொருட்கள் கடத்தல், சைபர் கிரைம் மற்றும் டிஜிட்டல் குற்றங்கள் என உலகமே வேகமாக மாறி வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், போலீஸ் துறையை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் குற்றவாளிகளை விட போலீஸ் துறை 2 படிகள் முன்னோக்கி இருக்க வேண்டும்.

சாட்சியங்கள் அவசியமானதாகும்

அவ்வாறு 2 படிகள் போலீஸ் துறை முன்னோக்கி இருந்தால் மட்டுமே குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் இல்லையெனில் அது சாத்தியமில்லாமல் போய் விடும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க விசாரணையின் அடிப்படை மட்டும் முடியாது. எந்த ஒரு விசாரணையும் அறிவியல் பூர்வமாக இருப்பதில்லை. தடய அறிவியல் மூலமாக கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.

இல்லையெனில் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியாது. சைபர் கிரைம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 6 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும். நமது சட்டத்தின்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க தடய அறிவியல் சாட்சிகள் கட்டாயமாகும். நமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களில் சாட்சிகள் முக்கியமானதாகும். எனவே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க தடய அறிவியல் சாட்சியங்கள் அவசியமானதாகும்.

சட்டம்-ஒழுங்கு சரியான நிலையில்...

கனடா நாட்டில் தண்டனை விகிதம் 62 சதவீதமாகவும், இஸ்ரேலில் 93 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 80 சதவீதமாகவும், அமெரிக்காவில் 90 சதவீதமாகவும் இருக்கிறது. நமது நாட்டில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் விகிதம் 50 சதவீதம் மட்டுமே உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதில் நாம் பின்தங்கி இருக்க முடியாது. நமது நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியான நிலையில் இருக்க வேண்டும் என்றால், தண்டனை விகிதத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கு போலீசாரின் விசாரணையுடன், தடய அறிவியல் ஆதாரங்களும் தேவையாகும். குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்த போது, தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை கொண்டு வந்திருந்தார். தற்போது தார்வாரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story