பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் மழை; அமித்ஷாவின் தெருமுனை பிரசாரம் திடீர் ரத்து


பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் மழை; அமித்ஷாவின் தெருமுனை பிரசாரம் திடீர் ரத்து
x

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் மழை பெய்ததால் அமித்ஷாவின் தெருமுனை பிரசாரம் திடீர் ரத்து செய்யப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜனதா தயாராகி வருகிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மாலையில் டெல்லியில் இருந்து மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்தார். மேலும் தேவனஹள்ளி தாலுகா விஜயப்புராவில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக அமித்ஷா நேற்று மாலையில் திறந்த காரில் தெருமுனை பிரசாரம் (ரோடு ஷோ) நடத்த திட்டமிட்டு இருநதார். ஆனால் நேற்று மாலையில் தேவனஹள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அமித்ஷா பங்கேற்க இருந்த தெருமுனை பிரசாரம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் துணை பொறுப்பாளரும், தமிழக பா.ஜனதா தலைவருமான அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை காரணமாக மத்திய மந்திரி அமித்ஷாவின் ெதருமுனை பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளோம். மழை பெய்து வருவதால் மக்களும், தொண்டர்களும் சிரமப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த பிரசாரத்தை இன்னொரு தினம் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேவனஹள்ளிலேயே மீண்டும் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் காரணமாக தேவனஹள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு அமித்ஷா புறப்பட்டு வந்தார். பெங்களூருவில் நேற்று இரவு கட்சி தலைவர்களுடன் சட்டசபை தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அமித்ஷா நிகழ்ச்சி ரத்து ஆனதால், பா.ஜனதா தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அமித்ஷாவுக்கு 250 கிலோ கொண்ட பிரமாண்ட ஆப்பிள் மாலை அணிவிக்க தயார் செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலம் ரத்தானதால் 250 கிலோ கொண்ட ஆப்பிள்களை பா.ஜனதா தொண்டர்களை போட்டிப்போட்டு மாலையில் இருந்து பிடுங்கி எடுத்து ருசித்தனர்.

1 More update

Next Story