'நான் பழுதாகி விட்டேன்' அமிதாப் பச்சன் உருக்கம்


நான் பழுதாகி விட்டேன் அமிதாப் பச்சன் உருக்கம்
x

நான் பழுதாகி விட்டேன் என்று அமிதாப் பச்சன் சமூகவலைதளத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.

மும்பை,

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். படத்தை நாக் அஸ்வின் இயக்க, கதாநாயகியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது அமிதாப் பச்சன் காயம் அடைந்தார். அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மும்பையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் 80 வயதாகும் அமிதாப் பச்சன் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் குறித்து சமூகவலைதளத்தில், "நான் உடல்நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பழுதாகிவிட்டேன். விரைவில் மேடை ஏறுவேன் என நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், ''விலா எலும்பில் கடுமையான வலி தொடருகிறது. பாதத்தில் ஏற்பட்ட வெடிப்பு அதைவிட முக்கியத்துவத்தை ஈர்த்து உள்ளது. விலா எலும்பு வலி குறைந்து, பாதத்திற்கு கவனம் செல்கிறது. கால் பெருவிரலுக்கு கீழ் ஒரு கொப்பளம் உள்ளது. இதற்கு முன் இதை அனுபவித்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ஆம், பயங்கரமாக வலிக்கிறது'' என குறிப்பிட்டு உள்ளாா்.


Next Story