ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சகோதரிக்கு வீட்டுக்காவல் தெலுங்கானா போலீசார் அதிரடி

இந்த போராட்டக்காரர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஷர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று கிளம்பினார்.
ஐதராபாத்,
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வருகிறார்.
அங்குள்ள சித்திபேட் மாவட்டத்தின் கஜ்வேல் கிராம மக்கள் தலித் பந்து திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டக்காரர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஷர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று கிளம்பினார்.
ஆனால் அந்த கிராமத்துக்கு செல்ல அனுமதி பெறவில்லை எனக்கூறி ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் வழிமறித்து வீட்டுக்காவலில் வைத்தனர். மேலும் அவரது வீட்டை சுற்றிலும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்த ஒய்.எஸ்.ஷர்மிளா, போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.