ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்தது; ஓரிரு நாட்களில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஷா வீடு திரும்புவார்
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்த நிலையில், ஓரிரு நாட்களில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஷா வீடு திரும்புவார் என டாக்டர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் எம்.ஆர். ஷா (வயது 64). இமாசல பிரதேசத்தில் தங்கியிருந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி நீதிபதி எம்.ஆர். ஷாவின் தனி செயலாளர் கூறும்போது, இமாசல பிரதேசத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அவருக்கு லேசான அறிகுறியே தென்பட்டது. அதனால் பயப்பட தேவையில்லை. தற்போது, அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவர் நன்றாகவே உணர்கிறார். அவரை டெல்லிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என கூறினார்.
இதன்படி அவர் உடனடியாக டெல்லிக்கு விமானத்தின் வழியே கொண்டு செல்லப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவும் தனது டுவிட்டரில் உறுதி செய்து பதிவிட்டார். அவர் விரைவாக குணமடைந்து திரும்ப வேண்டும் என அதில் வேண்டி கொண்டார்.
இந்நிலையில், டெல்லியின் ஓக்லா நகரில் உள்ள போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இதய மையத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அந்த தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த ரத்த ஓட்ட அடைப்பினை அந்த துறைக்கான டாக்டர் அதுல் மத்தூர் சீர் செய்துள்ளார். அதன்பின்பு ஷா, ஐ.சி.யு.வுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர் மத்தூர் மற்றும் அவரது தலைமையிலான குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் நீதிபதி ஷா சிகிச்சை முடிந்து வீடு திரும்ப கூடும் என கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்ற சேருவதற்கு முன்பு பாட்னா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியில் இருந்தவர் ஷா. அடுத்த ஆண்டு மே 15ந்தேதி அவர் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.