நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி மீது மேலும் ஒரு பா.ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு - சபாநாயகருக்கு கடிதம்


நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி மீது மேலும் ஒரு பா.ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு - சபாநாயகருக்கு கடிதம்
x

நாடாளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி மீது மேலும் ஒரு பா.ஜனதா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் கடந்த 21-ந்தேதி நடந்த விவாதத்தின்போது பேசிய பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை தெரிவித்தார். இது எதிர்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அரசு சார்பிலும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் டேனிஷ் அலி எம்.பி.யின் நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜனதா எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக அவரது தகாத வார்த்தை பிரயோகம் தொடர்பாக பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து ரவி கிஷன் சுக்லா என்ற மற்றொரு பா.ஜனதா எம்.பி.யும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது டேனிஷ் அலி மீது ரமேஷ் பிதுரி அந்த வார்த்தைகளை கூறியதற்கான சூழலை ஆய்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

டேனிஷ் அலி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள ரவி கிஷன் சுக்லா, ஏற்கனவே தனக்கு எதிராகவும் 2 முறை அவர் தகாத வார்த்தைகளை கூறியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். எனவே தொடர்ந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வரும் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரவி கிஷன் சுக்லா கோரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story