குண்டலுபேட்டையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த மற்றொரு சிறுத்தையும் சிக்கியது


குண்டலுபேட்டையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த மற்றொரு சிறுத்தையும் சிக்கியது
x

குண்டலுபேட்டை அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த மற்றொரு சிறுத்தையும் கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொள்ளேகால்:

தொடர் அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா குடிஹட்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளிேயறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அந்த சிறுத்தை, கிராமத்தையொட்டி உள்ள தோட்டத்தில் புகுந்து அங்கு மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது.

இதனால் வனத்துறையினர், அந்த கிராமத்தை சேர்ந்த உதய்குமார் என்பவரின் தோட்டத்தில் இரும்பு கூண்டு வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியிருந்தது.

மற்றொரு சிறுத்தையும் சிக்கியது

ஆனால் அந்தப்பகுதியில் மற்றொரு சிறுத்தையும் நடமாடி வந்தது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இதனால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடிக்கவும் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்தில் இரும்பு கூண்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்துஉணவு தேடி வெளியேறிய சிறுத்தை, அந்த இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.

இந்த நிலையில் நேற்று காலை மற்றொரு சிறுத்தையும் கூண்டில் சிக்கியது கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் வனத்துறையினர் விரைந்து வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை, கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

கிராம மக்கள் மகிழ்ச்சி

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது 6 வயது நிரம்பிய சிறுத்தை ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு சிறுத்தை சிக்கியிருந்தது. தற்போத மற்றொரு சிறுத்தையும் சிக்கி உள்ளது. இந்த சிறுத்தை பந்திப்பூர் வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்றார்.

தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 2-வது சிறுத்தையும் சிக்கி உள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story