மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - கேரளா விரைந்த தேசிய புலனாய்வு முகமை


மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - கேரளா விரைந்த தேசிய புலனாய்வு முகமை
x
தினத்தந்தி 29 Oct 2023 1:12 PM IST (Updated: 29 Oct 2023 1:24 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத வழிபாடு செய்தனர்.

இதனிடையே, மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், மத வழிபாட்டு கூட்டரங்கில் நடந்த சம்பவம் வெடிவிபத்து என தகவல் வெளியான நிலையில் இது குண்டுவெடிப்பு சம்பவம் என முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. டிபன்பாக்ஸ் குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை அமைப்புகளான தேசிய பாதுகாப்புப்படை (என்.எஸ்.ஜி.) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுகளின் மூத்த அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து குண்டுவெடித்த நிலையில் அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story