சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு நாளை மறுநாள் தீர்ப்பு
ஆந்திர மாநில ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார்.
அமராவதி,
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20-ந்தேதி ஆந்திர மாநில ஐகோர்ட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கியது.
இதனிடையே தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர மாநில ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள்(16-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.