இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கட்டிட வடிவமைப்பாளர் கைது
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கட்டிட வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு உளிமாவு-பேகூர் ரோட்டில் ஒரு தங்கும் விடுதி உள்ளது. அங்கு பெண்கள், ஆண்கள் தங்க தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தங்கும் விடுதியில் 23 வயது இளம்பெண் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து இருந்தார். பின்னர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய வாலிபர் உனது ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது என்றும், அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வரும்படியும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் போலீசார் கூறியதன்பேரில் அந்த இளம்பெண், வாலிபரை ஒரு ஓட்டலுக்கு வரும்படி கூறினார். அதன்பேரில் அங்கு வாலிபர் வந்தார். அப்போது மாறுவேடத்தில் இருந்த போலீசார் வாலிபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கட்டிட வடிவமைப்பாளராக வேலை செய்து வருவதும், இளம்பெண் தங்கி உள்ள விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்து உள்ளது. கைதான வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.