இந்தியாவில் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துவோர் ஆண்களா? பெண்களா? உலக வங்கி அறிக்கை


இந்தியாவில் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துவோர் ஆண்களா? பெண்களா? உலக வங்கி அறிக்கை
x

இந்தியாவில் நடந்து வேலைக்கு செல்லும் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர்.

புதுடெல்லி,


இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் என்ற பெயரில் ஆண்கள் மற்றும் பெண்களின் பேருந்து, ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

2004-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மும்பை நகரில் 6,048 பேரிடம் உலக வங்கி சார்பிலான ஆய்வு நடத்தப்பட்டது. இதில், வேலைக்கு செல்லும் ஆண்கள் இரண்டு சக்கர வாகனங்களுக்கும், பெண்கள் ஆட்டோ அல்லது வாடகை கார்களான டாக்சிகளுக்கும் மாறி விட்டனர் என தெரிய வந்தது.

எனினும், டாக்சிகளின் கட்டணம் ஒப்பீட்டு அளவில் சற்று அதிகம். இதனால், ஒரு சிலரை தவிர பெருமளவிலான பெண்கள் பேருந்துகளின் உதவியுடனேயே தங்களது வேலைக்கான பயணம் மேற்கொள்கின்றனர்.




பெண்களுக்கு பேருந்து பயணம், ஓரளவுக்கு போதிய செலவுகளில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் விரைவு போக்குவரத்துகளால் அதிகம் செலவு ஏற்படும் என்பதனால், அவற்றை தவிர்த்து விட்டு மெதுவாக செல்லும் போக்குவரத்துகளையே அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுதவிர, பாதுகாப்பின்மையும், பெண்கள் பொதுவெளியில் வருவது குறைவதற்கான தடுப்பு காரணிகளாக உள்ளன. இந்த ஆய்வின்படி, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொது போக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் என்றும் அவர்கள் 84 சதவீதம் அளவில் உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்த அறிக்கையின்படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களை விட அதிகம் உள்ளது. இந்த விகிதத்தின்படி, பெண்கள் 45.4 சதவீதத்தினரும், ஆண்கள் 27.4 சதவீதத்தினர்என்ற அளவிலும் உள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பொது போக்குவரத்து வடிவமைக்கப்படாத சூழலில், வேலை, கல்வி மற்றும் வாழ்க்கை தேவைகளுக்காக அவர்கள் வெளியே செல்வது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் 2019-20-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதம் 22.8 சதவீதம் என்ற அளவில் மிக குறைவு என்றும் தகவல் தெரிவிக்கின்றது.


Next Story