மத்திய மந்திரிசபையில் இலாகா மாற்றம் சட்ட மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை


மத்திய மந்திரிசபையில் இலாகா மாற்றம் சட்ட மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை
x
தினத்தந்தி 18 May 2023 10:45 PM GMT (Updated: 18 May 2023 10:45 PM GMT)

மத்திய மந்திரிசபையில் நேற்று அதிரடியாக இலாகா மாற்றம் செய்யப்பட்டது. புதிய சட்ட மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார். கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய மந்திரிசபையில் நேற்று அதிரடியாக இலாகா மாற்றம் செய்யப்பட்டது. புதிய சட்ட மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார். கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபையில் சற்றும் எதிர்பாராத வகையில் அதிரடியாக சிறிய அளவிலான இலாகா மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய சட்ட மந்திரி பதவியில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி முதல் பதவி வகித்தவர், அருணாசலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரண் ரிஜிஜூ ஆவார். அவர் அந்தத் துறையில் 2 ஆண்டு நிறைவு செய்வதற்குள் மாற்றப்பட்டு விட்டார். புதிய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரியாக அர்ஜூன்ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கிரண் ரிஜிஜூவுக்கு முக்கியத்துவம் இல்லாத புவி அறிவியல்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் ஆலோசனையின் பேரில், மத்திய மந்திரிசபையில் மந்திரிகள் இடையே பின்வரும் துறைகளை மறுஒதுக்கீடு செய்வதில் ஜனாதிபதி மகிழ்ச்சி அடைகிறார்.

கிரண் ரிஜிஜூவுக்கு புவி அறிவியல்கள் துறை வழங்கப்படுகிறது.

ராஜாங்க மந்திரியாக உள்ள அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு, தான் ஏற்கனவே வகித்து வருகிற துறைகளுடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை ராஜாங்க மந்திரி தனிப்பொறுப்பும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மந்திரியின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. அவர், சட்டம் மற்றும் நீதித்துறை ராஜாங்க மந்திரியாக பணியாற்றி வந்த எஸ்.பி.பாகல் ஆவார். தற்போது அர்ஜூன்ராம் மேக்வால் தனிப்பொறுப்புடன் கூடிய சட்டம் மற்றும் நீதித்துறையாக நியமிக்கப்பட்டதால், எஸ்.பி.பாகல் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவர் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரியாக மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

கிரண் ரிஜிஜூ முதலில் விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்து வந்தார், சட்டமந்திரியாக இருந்த ரவிசங்கர் பிரசாத் பதவி விலகலைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் மற்றும் நீதித்துறை கேபினட் மந்திரியாக அவர் உயர்த்தப்பட்டார்.

ஆனால் சட்ட மந்திரியாக இருந்து கொண்டு அவர் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியத்தை கடுமையாக சாடி வந்தார். கொலீஜியம் முறை, அரசியல் சாசனத்துக்கு அன்னியமானது என விமர்சித்தார். மேலும், ஓய்வு பெற்ற சில நீதிபதிகள், இந்திய எதிர்ப்பு கும்பலில் அங்கம் வகிக்கிறார்கள் என இவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சட்டம் மற்றும் நீதித்துறை இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம், பணியாளர்கள் நலன், அணுசக்தி, விண்வெளி, அறிவில் தொழில் நுட்பம், புவி அறிவியல் துறைகளை வைத்திருந்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கிடம் இருந்து புவி அறிவியல்கள் துறை மட்டும் பிரித்து, கிரண் ரிஜிஜூவுக்கு தரப்பட்டுள்ளது.

புதிய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன்ராம் மேக்வால் (வயது 69), ராஜஸ்தான் மாநிலம், பிக்கானிர் தொகுதியில் இருந்து 2009, 2014, 2019 என தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். எம்.ஏ., எல்.எல்.பி., எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். தற்போது நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாசாரத்துறை ராஜாங்க மந்திரியாக இருந்து வந்தார். இப்போது அந்தத் துறைகளுடன் சட்டம் மற்றும் நீதித்துறை தனிப்பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன்ராம் மேக்வாலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் மற்றும் நீதித்துறை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று உடனடியாக சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி பொறுப்பை ஏற்றார். அவருக்கு கிரண் ரிஜிஜூ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து அர்ஜூன்ராம் மேக்வால் நிருபர்களிடம் பேசுகையில், "அனைவருக்கும் விரைவான நீதியை உறுதி செய்வதற்கு நான் மிகுந்த முன்னுரிமை அளிப்பேன்" எனக் கூறினார்.


Next Story