திருமலையில் இலவச பஸ்களுக்கு பதிலாக மின்சார பஸ்களை இயக்க ஏற்பாடு


திருமலையில் இலவச பஸ்களுக்கு பதிலாக மின்சார பஸ்களை இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 21 Oct 2022 11:45 PM GMT (Updated: 21 Oct 2022 11:45 PM GMT)

திருமலையில் இலவச பஸ்களுக்கு பதிலாக மின்சாரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறினார்.

திருமலை,

திருமலையில் இலவச பஸ்களுக்கு பதிலாக மின்சாரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறினார்.

திருமலையில் உள்ள அன்னமய பவனில் எலக்ட்ரா நிறுவனத்தின் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, திருமலையை மாசு இல்லாத புனித தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகப் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சாரக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. 2-வது கட்டமாக திருப்பதி-திருமலை இடையே மின்சாரப் பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

2-வது கட்டமாக திருமலையில் பக்தர்களுக்காக டீசலில் இயக்கப்பட்டு வந்த 16 இலவச பஸ்களுக்கு (தர்ம ரதங்கள்) பதிலாக மின்சாரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக எலக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணாரெட்டி ரூ.15 கோடி மதிப்பில் 10 மின்சாரப் பஸ்களை வழங்க முன்வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

மின்சாரப் பஸ்களை வடிவமைத்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் நடந்தது. பக்தர்களுக்கு வசதியாக மின்சாரப் பஸ்களை வடிவமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3-வது கட்டமாக திருமலையில் இயங்கும் டாக்சிகள் மற்றும் பிற வாடகை வாகனங்களுக்காக, வங்கிக்கடன்களை வழங்கி திருமலை-திருப்பதி தேவஸ்தான ஒத்துழைப்போடு மின்சார வாகனங்களாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து எலக்ட்ரா நிறுவனத்தின் பிரதிநிதிகள், மின்சாரப் பஸ்களின் வடிவமைப்பு மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து குறும்படம் மூலம் விளக்கினர்.

அப்போது எலக்ட்ரா நிறுவன இயக்குனர் பிரதீப் கூறுகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் விருப்பப்படி 10 மின்சாரப் பஸ்களை காணிக்கையாக வழங்கியது வெங்கடாசலபதிக்கு நாங்கள் வழங்கிய மாபெரும் பரிசு ஆகும், என்றார்.

கூட்டத்தில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் கோபிநாத்ரெட்டி, மண்டல போக்குவரத்துக்கழக அலுவலர் செங்கல்ரெட்டி, திருப்பதி தேவஸ்தான போக்குவரத்துப் பிரிவு பொது மேலாளர் சேஷாரெட்டி, திருமலை பணிமனை மேலாளர் விஸ்வநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மின்சாரப் பஸ்சில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் திருமலை அன்னமய பவனில் இருந்து லேப்பாட்சி சர்க்கிள் வரை பயணம் செய்து ஆய்வு செய்தார்.


Next Story