அதானியை கைது செய்யுமாறு மத்திய நிதி மந்திரி அலுவலகம் சென்று மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை


அதானியை கைது செய்யுமாறு மத்திய நிதி மந்திரி அலுவலகம் சென்று மம்தா கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 March 2023 3:00 AM IST (Updated: 24 March 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

மம்தா கட்சி எம்.பி.க்கள் மத்திய நிதி மந்திரி அலுவலகத்துக்கு சென்று அதானியை கைது செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

புதுடெல்லி,

பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள், பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவை சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

அதன் அடிப்படையில், இதுதொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வற்புறுத்தி வருகின்றன.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதானியை கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி. ஆகியவற்றில் இருந்த மக்கள் பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியை அதானி முறைகேடு செய்து விட்டதாக அக்கட்சி கூறுகிறது.

இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் பிரதிமா மண்டல், அபு தாஹர் கான், கலிலுர் ரகுமான், சுனில் மண்டல், மாநிலங்களவை எம்.பி.க்கள் சாந்தனு சென், அபிர் பிஸ்வாஸ், மவுசம் நூர், சுஷ்மிதா தேவ் ஆகியோர் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு சென்றனர்.

மக்கள் பணத்தை முறைகேடு செய்ததற்காக அதானியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோடி, அதானி உருவம் பொறித்த 2 தொப்பிகளை தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும்வகையில் அங்கேயே விட்டுச்சென்றனர்.

இதுபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அடங்கிய மற்றொரு குழு, இதே கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றது.

''ஊழலுக்கு அடிபணிய மாட்டோம். எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருப்போம்'' என்று அக்கட்சி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Next Story