பெங்களூருவில் நடந்த குற்ற வழக்குகளில் 61 பேர் கைது
பெங்களூருவில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்
பெங்களூரு வடக்கு மண்டலத்தில உள்ள போலீசார், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள், போதைப்பொருட்கள், பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பொருட்கள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ரூ.2.40 கோடி மதிப்பு
பெங்களூரு வடக்கு மண்டலத்தில் உள்ள ஹெப்பால், ஆர்.டி.நகர், சஞ்சய்நகர், கங்கமனகுடி உள்ளிட்ட போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 61 பேரை கைது செய்துள்ளனர். அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள், செம்மரக்கட்டைகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக 662 கிராம் எம்.டி.எம்.ஏ, 28 கிலோ கஞ்சா, 1 கிலோ 900 கிராம் சிரஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 722 கிலோ செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் 722 கிராம் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 51 இருசக்கர வாகனங்கள், 7 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு துப்பாக்கி, 11 தோட்டாக்கள் மற்றும் ரூ.3½ லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.40 கோடி ஆகும். இதன்மூலம் பெங்களூருவில் பதிவாகி இருந்த 89 குற்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இருக்கிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை திறமையாக செயல்பட்டு பிடித்த வடக்கு மண்டல போலீசாருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.
பேட்டியின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.