பெங்களூருவில் கைதான பயங்கரவாதி தலீப் உசேன் பற்றி பரபரப்பு தகவல்கள்


பெங்களூருவில் கைதான பயங்கரவாதி தலீப் உசேன் பற்றி பரபரப்பு தகவல்கள்
x

பெங்களூருவில் பதுங்கியிருந்த போது கைதான பயங்கரவாதி தலீப் உசேன் காஷ்மீரில் நாசவேலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் பதுங்கியிருந்த போது கைதான பயங்கரவாதி தலீப் உசேன் காஷ்மீரில் நாசவேலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பயங்கரவாதி கைது

காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் தலீப் உசேன். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்த தலீப் உசேன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் பெங்களூரு ஒகலிபுரத்தில் உள்ள மசூதி வளாகத்தில் சிறிய அறையில் தனது 2-வது மனைவி, 3 குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.

காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவான தலீப்பை கடந்த 8 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை காஷ்மீருக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கைதான தலீப் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டம்

அதாவது பயங்கரவாத அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உயிருக்கு பயந்து தலீப் காஷ்மீரில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி வந்து வசித்து வந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் பெங்களூருவில் வசித்த போதும் தலீப் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிஷ்த்வார் மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்த தனது கூட்டாளியான முகமது உசேன் என்பவருக்கு தலீப் பெங்களூருவில் இருந்தபடியே திட்டம் தீட்டி கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த சதித்திட்டம் பற்றி முன்கூட்டியே அறிந்த கிஷ்த்வார் போலீசார் முகமது உசேனை கைது செய்தனர். விசாரணையில் குண்டுவெடிப்பு நிகழ்த்த தலீப் திட்டம் தீட்டி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தலீப் மீது கிஷ்த்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் தான் தற்போது அவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். காஷ்மீரில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு ரெயிலில் தான் தலீப் தப்பி வந்துள்ளார்.

செல்போன், மடிக்கணினி பறிமுதல்

முதலில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் வேலை செய்த தலீப் அங்கு உள்ளவர்களிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். அங்கு ஒருவரிடம் கிடைத்த பழக்கம் மூலம் ஒகலிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து உள்ளார். கொரோனா காரணமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட தலீப்புக்கு, மசூதியில் தங்க நிர்வாகிகள் இடம் கொடுத்துள்ளனர்.

ஸ்ரீராமபுரம் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் போது போலீசாரை பார்த்து விட்டால் தலீப் உடனடியாக முக கவசம் அணிந்து கொள்வாராம். மேலும் போலீசார் கைது செய்தபோது வீட்டிற்குள் சென்று வருவதாக கூறிய தலீப் வீட்டிற்குள் தனது செல்போன், மடிக்கணினியில் இருந்த புகைப்படங்களை அழித்து விட்டது தெரியவந்துள்ளது. தலீப்பின் செல்போன், மடிக்கணினியை கைப்பற்றிய ஸ்ரீராமபுரம் போலீசார் காஷ்மீர் போலீசாருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

மத்திய உள்துறை எச்சரிக்கை

இந்த நிலையில் கடலோர மாவட்டத்தில் சாட்டிலைட் போன் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் கர்நாடகம்-கேரள மாநில போலீசார் கவனமாக இருக்கும்படி மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. கேரளாவின் கொல்லத்தில் இருந்து மங்களூரு வரை உள்ள சாலைகளில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அந்த கடைகளுக்கு சொகுசு கார்கள் வந்து செல்வதாகவும் மத்திய உள்துறை கூறியுள்ளது.


இதனால் கொல்லத்தில் இருந்து மங்களூரு வரும் சாலையில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோர முகத்தை வெளிப்படுத்தாத தலீப்

தலீப் எப்போதும் அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு தான் அக்கம்பக்கத்தினரிடம் பேசி வந்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலீப் ஓட்டி சென்ற ஆட்டோ மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டது. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் தலீப்பிடம் தகராறு செய்ததுடன் அவரை பிடித்து தாக்கி உள்ளார்.


ஆனால் அப்போதும் கூட முகத்தை பாவமாக தலீப் வைத்து இருந்து உள்ளார். பயங்கரவாதியான தன்னை ஒருவர் அடித்த போதும் தனது கோர முகத்தை தலீப் வெளியே காட்டவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.


Next Story