அருணாசல பிரதேசம்: காணாமல் போன அசாம் தொழிலாளர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு
அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன அசாம் தொழிலாளர்கள் 5 பேரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இடாநகர்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் இந்திய-சீன எல்லையை ஒட்டிய, தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய அளவில் சாலை உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தலைநகர் இடாநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தமின் வட்டத்தில் நடந்த இந்த பணியில், அசாமை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட விடுமுறை தரும்படி பெங்கியா பதோ என்ற ஒப்பந்ததாரரிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். ஆனால், அவர் அனுமதி தர மறுத்து விட்டார். இதனால், அவர்கள் யாருக்கும் தெரியாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட, வன பகுதி வழியே கால்நடையாக நடந்து சென்று உள்ளனர். இதில், இரு குழுக்களாக அடர்வன பகுதியில் பிரிந்து சென்ற அவர்களை பின்னர் காணவில்லை.
இதுபற்றி ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். இதில், அங்குள்ள நதி ஒன்றில் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், காணாமல் போன மற்ற 18 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்பட்டது.
இதனை தொடர்ந்து, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் 23ந்தேதி 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மிகவும் சோர்வாக உள்ள அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், குருங் குமே மாவட்ட துணை ஆணையாளர் நிகீ பெங்கியா கூறும்போது, காணாமல் போன அசாம் தொழிலாளர்களில் 5 பேரின் உடல்கள், ஹுரி மற்றும் தபா என்ற பகுதிகளுக்கு இடையே அடர்ந்த வன பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஹிக்மத் அலி எனபவர் புராக் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
இதனால் மொத்தம் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். ஒருவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.