அருணாசல பிரதேசம்: காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டு கொலை; பயங்கரவாதிகள் வெறிச்செயல்
2015-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவை வெளியிட்டார்.
தீரப்,
அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. யம்சென் மதே, தனிப்பட்ட விசயத்திற்காக மியான்மர் எல்லையையொட்டிய ரகோ கிராமம் அருகே நேற்று (16-ந்தேதி) பிற்பகல் 3 மணியளவில் சென்றிருக்கிறார்.
அவருடன் 3 ஆதரவாளர்களும் சென்றுள்ளனர். வனப்பகுதிக்கு சென்ற அவரை, சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அந்த பகுதியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி லஜு காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் என்.எஸ்.சி.என்.-கே.ஒய்.ஏ. என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டில் கொன்சா மேற்கு தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்பின்னர், 2015-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அவருடைய நோக்கங்களையும் சமீபத்தில் வெளியிட்டார்.
2000-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து இதுவரை நடந்த ஊடுருவல் தொடர்பான 239 உயிரிழப்புகளில் 183 பேர் தீரப்-சங்லாங்-லாங்டிங் பகுதியில் உள்ளவர்கள் என அரசு குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.