'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தால் சாமானியருக்கு என்ன கிடைக்கும்? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் சாமானியருக்கு என்ன கிடைக்கும்? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
x

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தால் சாமானியருக்கு என்ன கிடைக்கும்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

4 ஆயிரம் நிர்வாகிகள் பதவி ஏற்பு

அரியானா மாநிலம் பிவானியில் ஆம் ஆத்மி கட்சியின் வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகள் 4 ஆயிரம் பேர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடந்த சில நாட்களாக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பற்றி பா.ஜனதா பேசி வருகிறது. அந்த திட்டத்தால் நமக்கு என்ன பயன்? சாமானியருக்கு என்ன கிடைக்கும்?

'ஒரே நாடு, 1,000 தேர்தல்கள்' என்று கொண்டு வந்தாலும், சாமானியருக்கு எதுவும் கிடைக்காது. எனவே, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். 'ஒரே நாடு, ஒரே கல்வி' என்று இருக்க வேண்டும். ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே கல்வி கிடைக்க வேண்டும்.

ஒரே நண்பன்

பிரதமர் மோடி, நாட்டுக்காக பணியாற்றாமல், ஒரே ஒரு நபருக்காக பணியாற்றுகிறார். அவருக்கு 140 கோடி மக்களின் ஓட்டு தேவைப்படுகிறது. ஆனால், 'ஒரே நாடு, ஒரே நண்பன்' என்று இருக்கிறார். மத்திய அரசு ஊழலில் ஈடுபடுகிறது. என்னை செயல்படவிடாமல் தடுக்க பார்க்கிறது. அதையும் மீறி, டெல்லி மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளேன். இதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும். ஆம் ஆத்மி குறுகிய காலத்தில் முடிந்து விடும் என்று அமித்ஷா பேசியுள்ளார். நாங்கள் டெல்லியை தொடர்ந்து, பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துள்ளோம். அடுத்து, அரியானாவிலும் ஆட்சியை பிடிப்போம். ஒருநாள், நாட்டில் இருந்து பா.ஜனதாவை ஒழித்து கட்டுவோம்.

இலவசம் பாவமா?

இலவசங்கள் வழங்குவதை பற்றி அரியானா முதல்-மந்திரி கட்டார் குறை சொல்லி இருக்கிறார். ஏழை குழந்தைகளுக்கு தரமான, இலவச கல்வி அளிப்பது பாவமா? ஏழைகளுக்கு இலவச ஆஸ்பத்திரிகள் கட்டி, மருத்துவ சிகிச்சை அளிப்பது பாவமா?

நீங்கள் நல்லது செய்திருந்தால், நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப் போகிறோம்? ஆம் ஆத்மியால்தான் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். பதவியை எதிர்பார்த்து யாரும் ஆம் ஆத்மியில் சேர வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story