மேற்கு வங்காளம் : இன்று கரையை கடக்கிறது "மோக்கா" - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


மேற்கு வங்காளம் : இன்று கரையை கடக்கிறது மோக்கா -  பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
x

மேற்கு வங்காளத்தில் இன்று "மோக்கா" புயல் கரையை கடக்கிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டிருந்தது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள, 'மோக்கா' புயல், அதிதீவிர புயலாக உருமாறி உள்ளதால், மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அந்தமான் தீவுகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஒரு சில வடகிழக்கு மாநிலங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் இன்று முதல் பலத்த மழையும், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் தெற்கு அசாம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் அவசர நிலையை கையாள, தேசிய பேரிடம் மீட்பு படையின் எட்டு குழுக்கள், 200க்கும் மேற்பட்ட வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளனர். எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில், கடலோர காவல் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானாசில் உள்ள பக்காலி கடல் கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குடிமைத் தற்காப்புக் குழு, மோக்கா புயல் மிகவும் அதி தீவிர சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக குடிமைத் தற்காப்பு அதிகாரி அன்மோல் தாஸ் கூறுகையில், "தற்போது நிலைமை சரியில்லை. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், கடற்கரைக்கு வருவதைத் தவிர்க்கவும் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story