8 ஆண்டுகளை நிறைவு செய்த பா.ஜ.க அரசுக்கு அடுக்கடுக்கான 8 கேள்விகளை எழுப்பிய தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள்!


8 ஆண்டுகளை நிறைவு செய்த பா.ஜ.க அரசுக்கு அடுக்கடுக்கான 8 கேள்விகளை எழுப்பிய தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள்!
x

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிஆர்எஸ் தலைவர் கவிதா, மத்திய அரசிடம் 8 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

நரேந்திர மோடி 26, மே 2014 அன்று முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். தற்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் கவிதா, மத்திய அரசிடம் 8 கேள்விகளை எழுப்பியுள்ளார்.


இவர் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் மகள் ஆவார். இவர் காமரெட்டி மற்றும் நிஜாமாபாத் சட்ட மேலவை உறுப்பினர் ஆக உள்ளார். அவருடைய தந்தை சந்திரசேகர் ராவ் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளை சமீபத்தில் சந்தித்து அவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். மேலும், தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முதல் பொருளாதாரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் வரையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அரசிடம் அவர் கேள்விகளை பதிவு செய்தார்.மத்திய அரசால் ஒருபோதும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் காமரெட்டி மற்றும் நிஜாமாபாத் சட்ட மேலவை உறுப்பினர் ஆக உள்ள கவிதா குறிப்பிட்டுள்ளார்.

முதல் கேள்வியாக, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) குறைந்து வருவதை சுட்டிக்காட்டினார். ஒரே ஒரு ஜிடிபி(எரிவாயு-டீசல்-பெட்ரோல்) மட்டுமே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு அபரிமிதமான விலை உயர்வின் மூலம் கிடைக்கும் பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

தெலுங்கானா மீது மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டிய அவர், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 7,000 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையை பாஜக அரசு எப்போது வழங்கும் என்று கேட்டார். மேலும், பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு தோல்வியடைந்திருப்பது, தோல்வியுற்ற அமைப்புகள் குறித்து தன் ஐந்தாவது கேள்வியில் கேட்டார். விவசாயிகளை இந்தியாவின் இதயத்துடிப்பு என்று கூறிய அவர், தெலுங்கானாவின் நெல் மற்றும் மஞ்சள் விவசாயிகள் தங்கள் கடின உழைப்புக்கு, குறைந்தபட்ச அங்கீகாரம் பெற முடியாமல் பாஜகவால் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மோடி அரசாங்கத்தின் "புதிய இந்தியா" பற்றிய யதார்த்தம் என்னவென்றால், நாட்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்கும் வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள். இதுவே புதிய இந்தியாவின் நிலை என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், பி.எம்.கேர்ஸ் நிதி(பிரதம மந்திரி நிதி)யின் பின்னணியில் உள்ள உண்மையை அறியவும், அவற்றின் உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய நாள் வரும் என்று கூறினார்.


Next Story