நாடு வளர்ச்சி அடையும்போது, கெட்ட சகுனம் போல் ராகுல் காந்தி முன்னே வருகிறார்: பா.ஜ.க. அதிரடி


நாடு வளர்ச்சி அடையும்போது, கெட்ட சகுனம் போல் ராகுல் காந்தி முன்னே வருகிறார்:  பா.ஜ.க. அதிரடி
x

புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும். பிரதமரால் அல்ல என ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன

நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. இதனை மக்களவை செயலகம் சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி நேற்று கூறினார்.

இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறும்போது, நாட்டில் எப்போதெல்லாம் வரலாற்று நிகழ்வு நடைபெறுகிறதோ அப்போது, ராகுல் காந்தி நெஞ்சில் அடித்து கொள்ள தொடங்கி விடுகிறார்.

ஏன் இது நடக்கிறது? நாடு வளர்ச்சி அடையும்போது, வெற்றிக்கான நேரங்களில் அவர் கெட்ட சகுனம் போல் முன்னே வருகிறார். ஜனநாயகத்தின் கோவிலாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருவாக உள்ளபோது, அதுபோன்ற ஒரு வரலாற்று தருண நிகழ்வை அவரால் வரவேற்க முடியவில்லை.

குறுகிய மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார் என கடுமையாக கூறியுள்ளார். இதேபோன்று, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் ஜனாதிபதிக்கு பதிலாக ஏன் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்வை தொடங்கி வைக்கிறார்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசை சாடியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியை அழைக்காமல், தொடர்ந்து விதிகளை அவமதிப்பு செய்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்திய குடியரசின் உச்சபட்ச ஆட்சிமன்ற அமைப்பாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது. அதன் உயரிய அரசியல்சாசன அங்கீகாரம் பெற்றவராக இந்திய ஜனாதிபதி திகழ்கிறார்.

ஜனாதிபதி மட்டுமே அரசு, எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிபலிக்க கூடியவர். இந்தியாவின் முதல் குடிமகன் அவர். அவரை கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நடத்துவது என்பது, ஜனநாயக மதிப்புகள் மற்றும் அரசியல்சாசன விதிகளில் அரசின் உள்ளார்ந்த ஈடுபாட்டை அடையாளப்படுத்தும் என கார்கே டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று, ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மனோஜ் குமார் ஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி. ராஜா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.


Next Story