உச்சத்தில் விலை... தக்காளியை பாதுகாக்க விளைநிலத்தில் சிசிடிவி கேமரா அமைத்த விவசாயி


உச்சத்தில் விலை... தக்காளியை பாதுகாக்க விளைநிலத்தில் சிசிடிவி கேமரா அமைத்த விவசாயி
x
தினத்தந்தி 8 Aug 2023 1:22 PM IST (Updated: 8 Aug 2023 2:55 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி திருடப்படுவதை தடுக்க விளை நிலத்தில் விவசாயி சிசிடிவி கேமரா அமைத்துள்ளார்.

மும்பை,

நாட்டில் தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை சற்று குறைந்துள்ளது. ஆனாலும், நாட்டின் பல பகுதிகளில் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை திருடி அதை சிலர் சந்தைகளில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. திருட்டை தடுக்க விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். சில விவசாயிகள் இரவு முழுவதும் விழித்திருந்து விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் தக்காளி திருட்டை தடுக்க விவசாயி தன் விளைநிலத்தில் சிசிடிவி கேமரா அமைத்துள்ளார்.

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்ஹஞ்ச் நகர் வலுஜா கிராமத்தை சேர்ந்த விவசாயி சரத் ரவெட் தன் விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தக்காளி விளைச்சல் தருவதால் அவருக்கு லாபம் கிடைத்து வருகிறது. அதேவேளை விளைநிலத்தில் பயிடப்பட்டுள்ள தக்காளியை இரவு நேரத்தில் சிலர் திருடி செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து தக்காளி திருட்டை தடுக்க எண்ணிய விவசாயி சரத் ரவெட் 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தன் விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் மூலம் விளைநிலத்தை கண்காணிப்பதாகவும் இதன் மூலம் தக்காளி திருட்டு தடுக்கப்படுவதாகவும் விவசாயி சரத் தெரிவித்துள்ளார்.


Next Story