போன வருட பட்ஜெட் உரையை வாசித்த முதல்-மந்திரி..! சட்டசபையில் அமளி


போன வருட பட்ஜெட் உரையை வாசித்த முதல்-மந்திரி..! சட்டசபையில் அமளி
x

இந்தாண்டு ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பெரிய மாநிலம் ராஜஸ்தான் மட்டுமே. முதல் மந்திரியாக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதை யொட்டி இந்தாண்டு ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இங்கு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. அதேபோல், எதிர்க்கட்சியான பாஜகவும் ஆட்சியை மீண்டும் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. இத்தகைய பரபரப்பு மிக்க அரசியல் சூழ் நிலையில் ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார்.

அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை சில நிமிடங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் மந்திரி மகேஷ் ஜோஷி, கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை முதல் மந்திரி அசோக் கெலாட் படிப்பதை கவனித்தார். உடனடியாக அசோக் கெலாட்டிடம் இதைக்கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசித்ததை நிறுத்தினார். உடனடியாக தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

எனினும் பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

சபாநாயர் உறுப்பினர்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.

வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்த போது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்து விட்டதாக எப்படி சொல்ல முடியும். தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் சட்டப்பேரவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.




Next Story