ஆன்லைனில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் படுகொலை; மாணவர்கள் அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தில் ஆன்லைனில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டது மாணவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ண குமார் யாதவ். தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். இவர் தனது சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். சகோதரியும் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில், இவரது சகோதரியுடன், சந்தீப் யாதவ் என்ற, அந்த ஊரை சேர்ந்த நபர் பேசி பழக்கம் ஏற்படுத்தி உள்ளார். இதற்கு கிருஷ்ண குமார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதனால் சந்தீப் ஆத்திரமடைந்து உள்ளார். இந்நிலையில், தனது மாணவர்களுக்கு மொபைன் போனில், ஆன்லைன் வழியே கிருஷ்ண குமார் பாடம் நடத்தி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, திடீரென வந்த 2 பேர் கிருஷ்ண குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில், மோதல் முற்றி, அவரை அடித்து, தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த காட்சிகள் போனில் வீடியோவாக பதிவாகி உள்ளது. இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மொபைல் போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சந்தீப், அவரது நண்பரான ஜக்கா ஆகிய இருவரும் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.