மதுபோதையில் போலீசார் மீது தாக்குதல்; 3 வாலிபர்கள் கைது


மதுபோதையில் போலீசார் மீது தாக்குதல்; 3 வாலிபர்கள் கைது
x

மங்களூரு அருகே மதுபோதையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு;

போலீசார் மீது தாக்குதல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சிலிம்பி பகுதியில் உருவா போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் 3 வாலிபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். இதைப்பார்த்த போலீசார், அவர்கள் 3 பேரையும் அழைத்து கண்டித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குடிபோதையில் இருந்த 3 பேரும் ஆத்திரமடைந்து போலீஸ்காரர்களை தரக்குறைவாக பேசி அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 போலீஸ்காரர்களும் காயம் அடைந்தனர். இதற்கிடையே 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

இதைதொடர்ந்து காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். மேலும் உருவா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் 3 வாலிபர்களையும் வலைவீசி தேடிவந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று போலீசாரை தாக்கிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், சிலிம்பி பகுதியை சேர்ந்த ரக்சித்(வயது 26), துர்கேஷ்(27), பிரஜ்வித்(26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story