சட்டசபை தேர்தல்; மத்திய பிரதேசத்தில் 6 மாநில டி.ஜி.பி.க்கள் ஆலோசனை கூட்டம்
நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தில் 6 மாநில டி.ஜி.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தூர்,
நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தில் 6 மாநில டி.ஜி.பி.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் மத்திய பிரதேச டி.ஜி.பி. சுதீர் சக்சேனா கூறும்போது, தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மத்திய பிரதேச எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், வரவுள்ள சட்டசபை தேர்தலை முறையாக நடத்துவதற்காக சத்தீஷ்கார், ராஜஸ்தான், மராட்டியம், குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் மாநில டி.ஜி.பி.க்கள் மற்றும் மாநிலத்தின் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
தேர்தலின்போது, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு குற்றவாளிகள் இடம் பெயர்கின்றனர். அதனால், அவர்களின் பட்டியல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதில், தேடப்பட்டு வரும் மற்றும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளும் அடக்கம்.
இதுதவிர, சட்டவிரோத மதுபானம் மற்றும் போதை பொருட்கள் வினியோகம் தடுப்புக்கான ஆலோசனையும் நடந்தது என சக்சேனா கூறியுள்ளார்.