பெங்களூரு விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அட்டூழியம்; மாணவி குமுறல்
கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் மாணவியை மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு செய்துள்ள அவலம் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ் பெற்ற கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு செய்துள்ளனர்.
நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்ல கூடிய இந்த விமான நிலையத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்காக சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் வீட்டு தனிமையிலும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது, என்னுடைய சட்டையை கழற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டது.
ஓர் உள்ளாடையை மட்டுமே அணிந்து கொண்டு, பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்றது உண்மையில் அவமதிப்புக்கும், வேதனைக்கும் ஆளாக்கியது. ஒரு பெண்ணாக பலரது கவனம் ஈர்க்கும் வகையில் நிற்பது என்பது ஒருபோதும் விரும்பத்தகாத ஒன்று.
ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்ற செய்ய வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவியான அவர் இசை கலைஞராகவும் இருந்து வருகிறார்.
இந்த தகவல் பரவியதும், பெங்களூரு விமான நிலையம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இது நடந்திருக்க கூடாது. இதுபற்றி எங்களது செயல் குழுவினருக்கு தெரிவித்து உள்ளோம். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவனித்து வரும் பாதுகாப்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என பதிலளித்து உள்ளது.
வேறொரு டுவிட்டர் பதிவில், உங்களுடைய தொடர்பு எண், பிற விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் என பதிவிடப்பட்டு உள்ளது.
எனினும், கிரிஷானியின் இந்த பதிவு பின்னர், அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அழிக்கப்பட்டு உள்ளது. அவரது டுவிட்டர் பக்கமே இல்லை என்றும் தகவல் வருகிறது. ஒரு வேளை பலரும் அவரிடம் தொடர்பு கொண்டு, ஆறுதல் என்ற பெயரில் பிற விவரங்களை கேட்பது எரிச்சலை ஊட்டி அவரே டுவிட்டரில் இருந்து வெளியேறி இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.