ஆள் வைத்து தாக்க சதி: கேரள முதல்-மந்திரி மீது கவர்னர் குற்றச்சாட்டு


ஆள் வைத்து தாக்க சதி: கேரள முதல்-மந்திரி மீது கவர்னர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Dec 2023 4:48 AM GMT (Updated: 12 Dec 2023 5:41 AM GMT)

அரசியலில் கருத்து வேறுபாடு, உடல் ரீதியான வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது என கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாக ரீதியிலான உறவு சீராக இல்லை.

இந்த நிலையில், டெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்றுகொண்டிருந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றான எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த சிலர், அவரது காரை வழிமறித்தனர். தொடர்ந்து, கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர்.

இதனால் கடுப்பான கவர்னர் ஆரிப் முகமது கான், காரை விட்டு இறங்கி, போராட்டக்காரர்களை கிரிமினல் என திட்டினார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது;

எனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல.. வேண்டுமென்றே என்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல்.

என்னை உடல்ரீதியாக காயப்படுத்த சதி செய்து இவர்களை அனுப்புவது முதல்-மந்திரிதான். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்னை நோக்கி கறுப்புக் கொடியை காட்டியது மட்டுமல்லாமல், காரின் இருபுறத்திலும் தாக்கினர். அரசியலில் கருத்து வேறுபாடு உடல் ரீதியான வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது. இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் , கவர்னரின் வாகனம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்களால் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது.


Next Story