சிகரெட் கொடுக்க மறுத்த தம்பதி மீது தாக்குதல் - 2 பேர் கைது
ஓசியில் சிகரெட் கொடுக்க மறுத்ததால் பெட்டிக்கடை நடத்தி வரும் தம்பதி மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனசங்கரி:-
பெங்களூரு பனசங்கரி 6-வது ஸ்டேஜ் பகுதியில் குமார் மற்றும் காவ்யா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்களது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த நவீன், வினய் ஆகியோர் அடிக்கடி வந்து சிகரெட் உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள். ஆனால் அவர்கள் அதற்கு பணம் கொடுக்காமல் கடனுக்கு பெற்று வந்தனர். இதுகுறித்து தம்பதி அவர்களை கேட்டபோது ஆத்திரமடைந்த நவீன் மற்றும் வினய் ஆகியோர், குமாரை தாக்கினர். இதுகுறித்து அவர் உடனடியாக தலகட்டபுரா போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அறிந்த நவீன் மற்றும் வினய் தம்பதியை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்கள் தங்களின் மகளையும் உடன் அழைத்து சென்றனர்.அப்போது நவீன் தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டி சென்றார். மேலும் இரும்பு கம்பியால் அவர்களது தலையில் தாக்கினார். இதில் நிலைதடுமாறி அவர்கள் ஸ்கூட்டருடன் சாலையில் சாலையில் விழுந்தனர். மேலும் அவர்கள் உதவிக்கு அழைத்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தலகட்டபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் மற்றும் வினய் ஆகியோரை கைது செய்தனர்.