ஹோலி கொண்டாடிய இளம் பெண்கள் மீது தாக்குதல்
மங்களூருவில் ஹோலி கொண்டாடிய இளம் பெண்கள் மீது பஜ்ரங்தள பிரமுகர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
மங்களூருவில் ஹோலி கொண்டாடிய இளம் பெண்கள் மீது பஜ்ரங்தள பிரமுகர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹோலி கொண்டாட்டம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள மரோலி பகுதியில் நேற்று முன்தினம் ''ரங் தே பர்சா'' என்ற பெயரில் ஹோலி கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி கொண்டாட்டத்தில் ஏராளமான வெளி நாட்டினர் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும், பாடல்களை போட்டு கொண்டு, ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பஜ்ரங்தள அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பஜ்ரங்தள அமைப்பினர், ஹோலி கொண்டாடிய இடத்திற்குள் புகுந்தனர். அப்போது அவர்கள் அங்கு கட்டி வைத்திருந்த பேனர்கள், மின் விளக்குகள், கொடிகள்,தோரணங்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை பார்த்த பெண்களின் நண்பர்கள், பஜ்ரங்தள பிரமுகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பஜ்ரங்கதள பிரமுகர்கள் கைது
இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தரப்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். இருப்பினும் மோதல் நிற்கவில்லை. இதையடுத்து அதிரடியாக செயல்பட்ட போலீசார், பஜ்ரங்தளத்தை சேர்ந்த 10பேரை கைது செய்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் கைது செய்த பஜ்ரங்தள பிரமுகர்கள் மீது மங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.