மூடிகெரே அருகே அரிவாளால் வெட்டி விவசாயியை கொல்ல முயற்சி; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மூடிகெரே அருகே அரிவாளால் வெட்டி விவசாயியை கொல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
விவசாயியை கொல்ல முயற்சி
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடு அருகே மேகலகத்தே கிராமத்தை சேர்ந்தவர் கிரண்(வயது 25). விவசாயி. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கிரண், தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அனேதிப்பா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் கிரணை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிரணை வெட்டி கொல்ல முயன்றனர். இதனால் கை, கால்களில் பயங்கர வெட்டு காயம் அடைந்த கிரண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.
வலைவீச்சு
இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பறந்து தப்பி சென்றுவிட்டனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் கிரணை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கோனிபீடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கிரணை கொல்ல முயன்றது யார், எதற்காக கொல்ல முயன்றனர் என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதத்தில் தீர்த்துக் கட்ட முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோனிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.