அயோத்தி: ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்பு


அயோத்தி: ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Dec 2023 3:18 AM GMT (Updated: 9 Jan 2024 9:38 AM GMT)

முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

கடவுள் ராமரின் சிலை வைக்கப்பட கூடிய கருவறையில் பணிகள் நிறைவடைய உள்ளன. இந்த சூழலில், ராமர் கோவிலின் உட்புறம் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் அடங்கிய புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

கடந்த அக்டோபரில், கோவிலின் தரை பகுதியில் விலையுயர்ந்த கற்களை கொண்டு பதித்து, அழகுப்படுத்திய பணிகள் அடங்கிய புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன.

ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை, வருகிற ஜனவரி 22-ந்தேதி நண்பகல் மற்றும் மதியம் 12.45 மணிக்கு இடையே நிறுவுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொது செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, முரளி மனோகர் ஜோஷி மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் உடல்நலம் மற்றும் வயது தொடர்பான காரணங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது.

அவர்கள் இருவரும் குடும்பத்தில் மூத்தவர்கள். அவர்களுடைய வயதினை கவனத்தில் கொண்டு, நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டது. இதனை அவர்கள் இருவரும் ஏற்று கொண்டனர்.

சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15-க்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16-ந்தேதி பிரான் பிரதிஷ்தா பூஜை தொடங்கி தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதுதவிர, 2,200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது.

காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அருண் கோவில், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

விருந்தினர்கள் தங்குவதற்காக அயோத்தியில் 3-க்கும் மேற்பட்ட இடங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 600 அறைகள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

ஜனவரி 23-ந்தேதியில் இருந்து கடவுள் ராமரை மக்கள் தரிசனம் செய்யலாம். வடஇந்திய பாரம்பரியத்தின்படி, ஜனவரி 24-ந்தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story