அயோத்தி விவகாரம்..வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு


அயோத்தி விவகாரம்..வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு
x

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. 22ஆம் தேதி நண்பகல் 12.20 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி நிலப் பிரச்சினை வழக்கில் முஸ்லிம்தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருப்பதாக இக்பால் அன்சாரியின் மகள் ஷமா பர்வீன் கூறியுள்ளார்.


Next Story