அயோத்தி ராமர் கோவில் நடை தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் - அறக்கட்டளை அறிவிப்பு


அயோத்தி ராமர் கோவில் நடை தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் - அறக்கட்டளை அறிவிப்பு
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 16 Feb 2024 10:34 AM GMT (Updated: 16 Feb 2024 10:46 AM GMT)

குழந்தை ராமருக்கு ஓய்வு கொடுக்க தினமும் ஒரு மணி நேரம் கோவில் நடை சாத்தப்படும் என ராமர் கோவில் தலைமை பூசாரி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு தினசரி பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொதுதரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது;-

"குழந்தை ராமர் 5 வயது பாலகன் ஆவார். இவ்வளவு நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. எனவே குழந்தை ராமருக்கு ஓய்வு கொடுக்க, கோவிலின் கதவுகளை சிறிது நேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதன்படி தினந்தோறும் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story