அயோத்தியில் கோவில் அருங்காட்சியகம் உத்தரபிரதேச அரசு தகவல்

அயோத்தியில் கோவில் அருங்காட்சியகம் அமையவிருப்பதாகவும், அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அயோத்தி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அயோத்தியில் கோவில் அருங்காட்சியகம் அமையவிருப்பதாகவும், அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள், "நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவில்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்துக்கான விரிவான வரைபடம் தயாராகி வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அருங்காட்சியகம் கட்டப்படுகிறது. இதற்கான நிலம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. கோவில் அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கம் இளைய தலைமுறையினருக்கு இந்து மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்" என கூறினார்.






