தண்ணீர் வாளியில் தவறி விழுந்து பெண் குழந்தை சாவு


தண்ணீர் வாளியில் தவறி விழுந்து பெண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 12 Dec 2022 12:30 AM IST (Updated: 12 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரேயில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தாவணகெரே:-

10 மாத பெண் குழந்தை

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா பிஸ்டுவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி தாரா. இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் அனுஷ்ரவ்யா என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் நேற்று அனுஷ்ரவ்யா வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள்.

மஞ்சுநாத்தும், தாராவும் வீட்டுக்குள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், விளையாடி கொண்டிருந்த குழந்தை அனுஷ்ரவ்யா, அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் தவறி விழுந்துள்ளது. இதனால் அந்த குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியது.

மூச்சுத்திணறி சாவு

குழந்தை வாளிக்குள் தவறி விழுந்ததை மஞ்சுநாத்தும், தாராவும் கவனிக்கவில்லை. இதனால், குழந்தை அனுஷ்ரவ்யா, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில், சிறிது நேரம் கழித்து குழந்தை காணாததை கண்டு மஞ்சுநாத்தும், தாராவும் அதிர்ச்சி அடைந்து தேடினர். அப்போது குழந்தை அனுஷ்ரவ்யா, தண்ணீர் வாளியில் அசைவற்று

கிடப்பதை பார்த்து அதிர்ந்துபோன 2 பேரும், குழந்தையை தூக்கிக் கொண்டு ஜகலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு துடி, துடித்து போன மஞ்சுநாத்தும், தாராவும் குழந்தை அனுஷ்ரவ்யாவின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

சோகம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜகலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை அனுஷ்ரவ்யா தண்ணீர் வாளியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story